சீன எல்லையில் போர் பதற்றம்..! இந்தியா படைகள் குவிப்பு..!

சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள சீன எல்லையில் கூடுதலாக இந்தியா ராணுவப்படைகளை குவித்துள்ளது.

இந்தியா – சீனா இடையே ‘டோக்லாம்’ விவகாரம் தலை தூக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு நெருங்கி வராத நிலை ஏற்பட்டது. இந்திய படைகளை வாபஸ் பெற்றால்தான் பேச்சுவார்த்தைக்கு வர முடியும்  என்று சீனா நிபந்தனை விதித்தது.

அதற்கு இந்திய தரப்பில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் சீன – இந்திய எல்லையில் இந்தியா ராணுவப்படைகளை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் ராணுவப் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதை இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர்  உறுதிப்படுத்தியுள்ளார். டோக்லாம் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவை ஒட்டியுள்ள இந்திய எல்லையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையே போர் எந்நேரமும் ஏற்படலாம் என்று பரவலாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்திய ராணுவத்தினர்  எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது, இப்பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம்  மாநிலங்களில் உள்ள ராணுவப் படைகள் இந்திய – சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

டோக்லாமை உரிமை கொண்டாடுவதில் சீனாவும், பூட்டானும் போட்டியில் உள்ளன. டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க  தொடங்கிய பின்னரே இந்தப் பிரச்னை மேலும் அதிகரித்தது. பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சாலை அமைக்கும் பணிகளை சீனா  நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Topics : National News

About the author

Related

JOIN THE DISCUSSION