ஆண்டாள் என் தமிழ்த்தாய்! கவிஞர் வைரமுத்து உருக்கம்!!

0
1

சென்னை: ஆண்டாள் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் கவிஞர் வைரமுத்து.
இந்நிலையில், அவர் பிரபல ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்து தன்னிலை குறித்து விளக்கியுள்ளார்.
அவரது பேட்டி விபரம்:


திருவள்ளுவர், கம்பர், வள்ளுவர், பாரதியார் பற்றி 13 புத்தகங்கள் எழுதி உள்ளேன். நாயன்மார்களில் அப்பர், ஆழ்வார்களில் ஆண்டாள் ஆகியோரை பற்றியும் ஆய்வு செய்கிறேன். ஆண்டாளின் தமிழை நான் 40 ஆண்டுகளாக சுவாசித்து வாழ்ந்து வருகிறேன்.
ஆண்டாளின் மூலம் அந்த கால சமூகத்தையும், சூழலையும் பார்க்கிறேன்.


அவருடைய தமிழை மட்டும் நான் கொண்டாடவில்லை. அவர் பெண்களின் ஆளுமைக்காக முதல் குரல் கொடுத்ததையும் கொண்டாடுகிறேன்.
ஆண்டாள் பற்றி 35 அல்லது 40 நிமிடங்கள் பேசினேன். அது நல்ல வரவேற்பை பெற்றது. நான் பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டி விளக்கி கூறினேன்.

ஆண்டாளை பல்வகையிலும் புகழ்ந்து பாராட்டி நான் பேசினேன். அப்போது ஆண்டாளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் உள்ள வி‌ஷயங்களைப்பற்றியும் கூறினேன்.
ஆண்டாள் தேவதாசியாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து அங்கு இறந்ததாக அந்த ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாக கூறினேன்.
கடவுளாகவும், கடவுளுக்கு சேவை செய்தவராகவும் கூறப்படும் ஆண்டாளை பற்றி இப்படி அதில் எழுதப்பட்டிருக்கிறது என்று மேற்கோள்காட்டி சொன்னேன்.

ஆராய்ச்சி கட்டுரையில் கூறப்பட்டுள்ள அந்த வார்த்தை தற்போது தவறான அர்த்தத்தில் மாறி இருக்கிறது. அதில் தாசி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்பது வேறு. ஆனால் இடையில் தாசியை வேசி என்பதுபோல வேறு அர்த்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள். நான் இதுபற்றி விரிவாக சொன்னபோதும், அதை புரிந்து கொள்ளவில்லை.

ஆண்டாள் எனக்கு பாலூட்டி வளர்த்த தாய் போன்றவர். ஆண்டாள் தனது தமிழை எனக்கு ஊட்டி என்னை இந்த அளவுக்கு வளர்த்துள்ளார். அப்படி இருக்க நான் எனது தாயை சிறுமைப்படுத்துவேனா?
ஆனால் வேண்டுமென்றே இந்த வி‌ஷயம் திரிக்கப்படுகிறது.

நான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். தமிழ் எழுத்தாளர்களும் இதுபற்றி விளக்கி இருக்கிறார்கள். நான் எப்போதுமே உண்மையையே பேசுகிறேன். இந்த வி‌ஷயத்தில் இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.
இப்போது முதல் முறையாக பகுத்தறிவாளர்களும் ஆண்டாளுடைய பணியை பாராட்டி இருக்கிறார்கள்.
நான் எப்போதுமே எனது பணியில் உண்மையாக நடந்து கொள்பவன். எனது பக்கம் எப்போதும் நீதி இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here