திருநங்கையை நிர்வாணமாக்கிய போலீசார்..! ‘நீட்’ இன்னொரு கோரமுகம்..!

தமிழகம் முழுவதும் நீட் போராட்டம் வீறுகொண்டு எழுந்து வருகிறது. பல அமைப்புகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பில் இருந்தும் நீட் போராட்டம் வெடித்துள்ளது. அனிதா மரணம் கொடுத்த சங்கொலி, போராட்டமாக தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிறது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இந்தியாவின் முதல் இன்ஜினியரிங் திருநங்கையான கிரேஸ் பானுவை போலீசார் நிர்வாணமாக்கி சோதனை செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய கிரேஸ் பானுவை கைது செய்த போலீசார் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திவிட்டு புழல் சிறையில் அடைத்துள்ளனர். அங்கு திருநங்கைகளை நிர்வாணமாக்கி சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.


கிரேஸ் பானு மறுத்து கேள்வி எழுப்பவே, நீங்கள் திருநங்கைதானா? அதற்கான ஆபரேசன் செய்துள்ளீர்களா என்று சோதனை செய்ய வேண்டும்.இல்லை என்றால் பெண்களுக்கான சிறையில் உங்களை அடைக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

நான் திருநங்கை என்பதை ஒப்புக்கொண்டு தான் அரசாங்கம் எனக்கு இஞ்ஜினியரிங் சீட் தந்தது. எனது பெயரையும் கெஜட்டில் பதிவு செய்துள்ளேன். இப்போது அதில் உங்களுக்கு என்ன சந்தேகம் என்று கிரேஸ் பானு கேட்டுள்ளார்.

அதெல்லாம் நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர், அவர்களே ஆடைகளை களையத் தொடங்கி விட்டனர். ‘தலை குனிந்து நிர்வாணமாக நின்றேன்’ என்று கண்ணீருடன் கூறினார், திருநங்கை கிரேஸ் பானு.

‘அவர்கள் வீட்டு பெண்களாக இருந்தால் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்வார்களா..? அதிலும் இன்னும் வேதனை என்ன தெரியுமா..?
ஆபரேசன் நடந்த அந்த இடத்தை பார்த்து சோதனை மேற்கொண்ட  போலீசார் ஒருவருக்கொருவர் கேலி பேசி சிரித்தார்கள்.  அந்த மன வலி இன்னும் போகவில்லை’ என்றார் வேதனை பொங்க.

‘சமீபத்தில் தான் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு மசோதா மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், எங்களது உரிமைகளை சட்டத்துடன் தொடர்புள்ள போலீசாரே பின்பற்றவில்லை என்றால், யார் எங்களை பாதுகாக்க முடியும்?’ என்று கேட்கிறார், கிரேஸ் பானு, தி கிரேட் பானு.

Related Topics : Tamilnadu News

 

About the author

Related

JOIN THE DISCUSSION