மஞ்சள் காமாலை சிகிச்சைக்கு உதவும் துணி கண்டுபிடிப்பு!

0
0

சுவிட்சர்லாந்து: மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றா புதிய வகை துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எம்பா ஆய்வு நிறுவனம் இதனை கண்டுபிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் மெட்டீரியல் ரிசர்ச் ஆய்வுமையம் இயங்கிவருகிறது. இங்கு நோய் எதிர்ப்பு திறனுக்கான துணிவகைகள் குறித்த ஆய்வு நடந்து வருகிறது.

தாயின் வயிற்றில் வளரும்போதே குழந்தைகள் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்படும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது.
குழந்தை பிறந்ததும் அதற்கு இந்நோய் இருப்பது தெரியவந்தால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இதற்காக குழந்தை தாயிடம் இருந்து பிரிக்கப்படும். இன்குபேட்டரில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.

இதற்கான பிரத்யேக இன்குபேட்டரில் நீல நிற ஒளி படரும். இந்த ஒளி குழந்தையின் கண்களில் படாமல் இருப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
இச்சிகிச்சையால் சில குழந்தைகளுக்கு தோல், கண்களில் பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில், எம்பா நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளது.

இந்நிறுவனம் கண்டுபிடித்துள்ள நீலநிற துணி ஒளியை உமிழும் போர்வை போன்று உள்ளது. ஒளியை தருவதற்காக துணியின் ஓரத்தில் பேட்டரி இணைக்கப்படுகிறது. துணியின் நூல்களுக்கு இடையேயுள்ள எல்.ஈ.டி.பல்புகள் நீல ஒளி தருகின்றன.

எனவே குழந்தையின் உடலைச்சுற்றி இத்துணியால் போர்த்தினால், நீலநிற ஒளி குழந்தையின் உடலில்பட்டு நோய் குணமாகும்.
இத்துணியை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இது எடைகுறைவாகவும், மெல்லியதாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு எவ்வித சுமையையும் தராது.
இத்துணிகள் அடுத்தாண்டு ஜனவரியில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here