பன்னீர்செல்வம் செய்தது சரிதானா?

பிரதமரை சந்தித்து திரும்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.  அதிமுகவில் அவர் மீண்டும் இணைந்ததற்கு பின்னர் நடந்த முதல் சந்திப்பு இது.

இரட்டை இலை வழக்குக்காக கடந்த 6ம் தேதி டெல்லி சென்றிருந்த அவர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். கிடைக்கவில்லை.

நேற்று அவருக்கு பிரதமர் நேரம் ஒதுக்கி இன்று சந்திப்பு நடந்துள்ளது.

இரு தலைவர்களும் சுமார் அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த பேசிய பன்னீர்செல்வம்,

பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

தமிழகத்தின் மின் தேவை, வீட்டுவசதி திட்டம், நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் அளித்த கோரிக்கைகளை பிரதமரிடம் வழங்கினேன்.

பிரதமர் மோடியிடம், அரசியல் குறித்து பேசவில்லை. முதலமைச்சருக்கும், எனக்கும் மன வருத்தம் ஏற்படவில்லை.
அதிமுகவில் இனி  பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து அறிய  மத்திய அரசு மருத்துவக் குழுவை தமிழகத்திற்கும் அனுப்பும்  என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

கட்சியிலும், ஆட்சியிலும் எங்கள் அணியினர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுவது உண்மையில்லை.                                                                                                                                                              என்னையும் அமைச்சர்களையும் கலந்து பேசியே முதல்வர் பழனிசாமி முடிவெடுக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

பன்னீர்செல்வத்தின் பேட்டி அதிமுகவில் இன்னமும் பன்னீர் அணி தொடர்கிறதை உறுதி செய்வதாக உள்ளது. மேலும், அவருடன் டெல்லி சென்றதும் அவரது ஆதரவாளர்கள்தான் என்பதும் கவனிக்கத்தக்கது.

மின் துறை, சுரங்கத்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றை கவனிக்க வேறு அமைச்சர்கள் உள்ளனர். அவர்களது பணியை  பன்னீர்செல்வம் பார்த்து வருகிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வால் ஏற்கனவே நிதிநெருக்கடியில் உள்ள அரசுக்கு கூடுதல் சுமையை தரும்.

தமிழகத்தின் நிதி ஆதாரங்களை அதிகரிக்க மத்திய அரசின் ஒத்துழைப்பையும் கேட்டுப்பெற வேண்டிய  நிதித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அதுகுறித்து வலியுறுத்தியதாக பேட்டியில் தெரிவிக்கவில்லை.

மத்திய அரசு பாக்கிவைத்துள்ள  திட்ட ஒதுக்கீடுகளுக்கான பணத்தை எப்போது கிடைக்கும் என்ற எந்த ஒரு உத்தரவாதத்தையும் பிரதமரிடம் பெறாமல் வெறுங்கையோடு திரும்பியிருப்பது பன்னீர் செய்தது சரிதானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதற்கிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மின் துறை அமைச்சர்  வீரமணி  இன்று சந்தித்துள்ளார்.   இது இபிஎஸ், ஓபிஎஸ் அதிருப்தியை வெளிக்காட்டுவதாக உள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION