ரயிலில் இருந்து ஒரே ஒரு ‘ட்வீட்’..! அரைமணியில் காப்பாற்றப்பட்ட சிறுவன்..!

0
0

சமூக வலைத்தளங்கள் வெறும் பொழுதுபோக்கு களங்கள் என்ற மாயை தற்போது உடைந்து வருகிறது. பல நல்ல விசயங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே பகிரப்பட்டு விரைவாக தெரிவும் கிடைக்கிறது.

அந்த வகையில் பெங்களூரில் நடந்த சம்பவம் உதாரணம்.

பெங்களூரிலிருந்து டெல்லி செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பெங்களூரிலிருந்து புறப்பட்டது.அந்த ரயிலில் ஹரியானாவைச் சேர்ந்த கணவன்,மனைவி அவர்களது 4 வயது மகனுடன் பயணம் செய்தனர்.

ரயில் பயணத்தின் போது இரவு 9.30 மணிக்கு சிறுவனுக்கு காய்ச்சல் உண்டானது. காய்ச்சல் குறைந்துவிடும் என்று நினைத்த பெற்றோருக்கு ஏமாற்றமே. காய்ச்சல் கொஞ்சநேரத்தில் 104 டிகிரியானது.காய்ச்சல் அதிகமாகி நீர்ச்சத்து குறைந்ததால், சிறுவன் மயக்கமடைந்தான். பதறிப்போன பெற்றோர், புரியாமல் தவித்து நின்றனர்.

அடுத்த ரயில் நிலையம் வர இன்னும் அரை மணிநேரத்துக்கு மேல் ஆகும் என்றார்கள் சக பயணிகள். அதற்குள் மகனுக்கு காய்ச்சல் அதிகமாகி வலிப்பு வந்து விடுமோ என்று பயந்து போனார்கள்.

உடனே, சிறுவனின் தந்தைக்கு ஒரு ஐடியா தோன்றியது. குழந்தையுடன் ஆபத்திலிருப்பதாகவும், தன் மகனின் உயிரைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர் இறங்கப் போகும் ரயில் நிலையத்தையும் குறிப்பிட்டு ட்வீட் செய்தார்.

அடுத்த இருபதே நிமிடங்களில் இடார்சி ரயில் நிலையம் வந்தது. மயங்கியிருந்த அவரது மகனை தோளில் தூக்கிக்கொண்டு பதறியபடி இறங்கிய பெற்றோரை ரயில்வே சிறப்பு மருத்துவக்குழு வரவேற்றது. உண்மையிலேயே சிறுவனின் தந்தை இன்ப அதிர்ச்சிக்குள்ளானார். அவரது கண்ணில் கண்ணீர் வழிந்தது. ஆமாம். ஆனந்த கண்ணீர்.

ரயில் நிலையத்திலேயே சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. சிறுவன் இப்போது இடார்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறான். ஒரே ஒரு சின்ன ட்வீட் தன் மகனின் உயிரைக்காத்ததை எண்ணி தந்தை ஆனந்தக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்.

ஒரு சின்ன ட்வீட்டுக்கு மதிப்பளித்து ரயில்வே நிர்வாகம் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவியவர் ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவர்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here